கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

2014ம் ஆண்டு, வான்கடே மைதானம், மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டி. ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றினை அடைகின்ற நான்காவது அணியினை தேர்வு செய்யும் போட்டி. ஓர் விஷப்பரீட்சை. ஒரு புறம் 13 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று, 6 போட்டிகளை தோல்வியடைந்த நிலையில் இருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால், கடைசி 5 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்று மீதம் 3 போட்டிகளை இலவசமாக எதிராணியிற்கு வெற்றியினை வாரி வழங்கியது. மறுபுறம் மும்பை அணி 6 போட்டிகளை வென்று, 7 போட்டிகளில் உதைவாங்கியிருந்தது. ஆனால், கடைசி 8 போட்டிகளில் 6 அப்போட்டிகளை வென்றுள்ளது, 2 போட்டிகளை மட்டுமே தவற விட்டது. மும்பை அணியினை பொறுத்த வரை 14.3 ஓவர்களுள் இலக்கினை அடிக்க வேண்டும். அவ்வாறு, செய்ய தவறினால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றை அடைந்துவிடும். 

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆதலால், ராஜஸ்தான் எவ்வித ஸ்கோரினை அடித்தாலும் அதை 14.3 ஓவர்களுள் அடித்தால் மட்டுமே மும்பை அணியினால் தகுதி பெற முடியும். ராஜஸ்தான் அணி முதல் 6 ஓவர்களில் மிக பொறுமையாகவே தொடங்கியது. குறிப்பாக வாட்சன், சில பந்துகளை சாப்பிட்டு, 18 பந்துகளில் வெறும் 8 ரன்களை அடித்து வெளியேற்றப்பட்டார். அதனால், 6 ஓவர்களில் முடிவில் 35/1 எனவே ஸ்கோர் இருந்தது. அதற்குப்பின்னாவது அடித்து விளையாடுவார்கள் என்றால், மீண்டும் அதே ராகம், அதே தாளம். முதல் 10 ஓவர்களில் முடிவில் 59/1 என்றே ஸ்கோர் இருந்தது. " ஸ்பீடு பத்தல டா" என்று ராஜஸ்தான் ரசிகர்கள் குரலெழுப்ப, மும்பை அணியின் கை மேலோங்கி இருந்தது. ஆனால், அதற்கு பின் நடைபெற்றது தான், சிறப்பான விருந்து. "கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து" எனும் திருக்குறளின் அர்த்தத்திற்கேற்ப, பொறுமையாக விளையாடிக்கொண்டிருந்த கருண் நாயர், ஷ்ரேயஸ் கோபால் வீசிய 11வது ஓவரை குறிவைத்தார். 19 ரன்கள் குவிக்கப்பட்டது. அதில் 3 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸர் அடிக்கப்பட்டது. வாகனத்தின் வேகத்தை கூட்டுவதற்கு, சிறிது வேகத்தினை குறைத்து கியரை மாற்றுவார்கள், பின்னர் வண்டியின் வேகம் அதிகரித்தே காணப்படும். அவ்வாறு, இருவரும் வேகத்தை கூடினார்கள். அதன் காரணமாக இருவருமே அரை சதங்களை எட்டினார்கள். மும்பை அணியிற்கு ஒன்றும் விளங்கவில்லை. சஞ்சு சாம்சன் 74 மற்றும் கருண் நாயர் 50 ரங்களுக்கு ஆட்டமிழந்தார்கள். தேவையான ஆபத்தை கொடுத்து விட்டார்கள். பின்னர், அந்த ஆபத்தின் வீரியத்தை கூடும்வாறு பிராட் ஹாட்ஜ் மற்றும் ஃபால்க்னெர் இறுதிக்கட்ட ஓவர்களில் சில பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் முடிவினை கொடுக்க, 189/4 என்கிற இலக்கை அடித்தது. அதாவது 20 ஓவர்களில் நாம் கணக்கிட்டால் கூட இது மிகப்பெரிய ஸ்கோராக அமையும். இதனை 14.3 ஓவர்களில் அடிக்க வேண்டிய கட்டாயம், மும்பை அணியிற்கு. 

உள்ளே இறங்கியது சிம்மோன்ஸ் மற்றும் மைகேல் ஹசி. அவர்கள் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்த விஷயம், பந்தினை பார்த்து பௌண்டரியினை அடிக்கவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே. மும்பை அணி, முதல் ஓவரில் 12 ரன்களை குவித்தது. இரண்டாவது ஓவரில் சிம்மோன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். இங்கு, அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா, வழக்கத்திற்கு மாறாக கோரே ஆண்டர்சனை 3வது இடத்தில் இறக்குகின்றார். மறுபுறம் இடது கை பட்ஷமானான ஹஸி. கோரே ஆண்டர்சன், உள்ளே இறங்கிய முதற்பந்திலிருந்து அதிரடியாக விளையாடுகின்றார். இருவருமே சில சிக்ஸர்களை குவிக்க, 4 ஓவர்களில் முடிவில் 53/1 என்று ஸ்கோர் இருந்தது. பின்னர் 5வது ஓவரில், ஹஸி தனது விக்கெட்டை இழக்க, உள்ளே இறங்கியது பொல்லார்ட். அவரும் சிக்ஸர் அடிக்க முயன்று, முதல் முறை தேர்ச்சி பெற்றார். ஆணாக, மீண்டும் ஒரு முறை முயன்று, கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். ஆனாலும், கோரே ஆண்டர்சன் அடங்க மறுத்தார். பவர்பிளே ஓவர்களில் முடிவில் 71/3 என ஸ்கோர் இருந்தது. உள்ளே, கோரே ஆண்டர்சன் மற்றும் ரோஹித் ஷர்மா. அங்கிருந்து இருவருமே, வேகத்தினை கூட்டினர். 10வது ஓவரில் ரோஹித் ஷர்மாவும் தனது விக்கெட்டை இழந்தார். 10 ஓவர்களில் முடிவில் 120/4 என ஸ்கோர் இருந்தது. தேவையாய் இருந்தது 27 பந்துகளில் 70 ரன்கள். உள்ளே இறங்கியது அம்பத்தி ராயுடு. அப்போதெல்லாம், ராயுடு இடையில் விளையாடி பொறுமையாக சில ரன்களை சேர்ப்பர் என்று தான் பெயர் இருந்தது. ஆனால், இங்கு ராக்கெட்டின் வேகத்தில் ரன்களை குவிக்க வேண்டிய நிலை. என்ன செய்யவுள்ளார் என அனைவர் மனத்திலும் கேள்வி. ஆனால், ராயுடு வருகின்ற முதற்பந்திலிருந்து பௌண்டரிகளை குவித்தார். இருவருமே இரண்டு மடங்கு வேகத்தில் ரன்களை சேர்த்தனர். கடைசி 10 பந்துகளில் 24 ரன்கள், தேவை என்று கணக்கு இருந்தது. அதற்கு அடுத்த பந்தினை பௌண்டரியிற்கு அடிக்க, 9 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்று இலக்கு குறைந்தது. ஸ்கோர் 13 ஓவர்களில் முடிவில் 170/4 என இருக்க, கோரே ஆண்டர்சன் 38 பந்துகளில் 84 ரன்களை அடித்திருந்தார். ராயுடு 7 பந்துகளில் 22 ரன்களை அடித்திருந்தார். தாம்பே பந்துவீச முதற்பந்தினை தவறினார் கோரே ஆண்டர்சன். இரண்டாவது பந்தினை வீச, நான்கனை அடித்தார். 16 ரன்கள் 7 பந்துகளில் அடிக்க வேண்டும். அடுத்த இரண்டு பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 14 ரன்கள் 5 பந்துகளில் தேவையாய் இருந்தது. அனைவர் மனத்திலும் ஒரே படபடப்பு. மீண்டும் ஓர் நான்கனை அடித்தார் ஆண்டர்சன். 10 ரன்கள் 4 பந்துகளில் தேவை. அடுத்த பந்தில் 1 றன் எடுத்தார் ஆண்டர்சன். 14 ஓவர்களின் முடிவில் 181/4 என ஸ்கோர் இருந்தது. ஃபால்க்னரின் கைகளில் பந்து இருந்தது. முதற்பந்தில் பௌண்டரி அடிக்க முயன்று, பாட்டின் பிற்பகுதியில் பந்து பட்டு 1 றன் மட்டுமே எடுக்க முடிந்தது. 8 ரன்கள் 2 பந்துகளில் தேவை. ராயுடு உள்ளே இருந்தார், 8 பந்துகளில் 23 ரன்களை குவிந்திருந்த நிலையில். கால்களை நோக்கி ஃபுள் டாஸ் பந்தினை வீச, அதை மடக்கி சிக்ஸர் அடித்தார். ஒரே பந்தில் 2 ரன்கள் தேவை. ஆனால், பாவம், 1 றன் மட்டுமே எடுக்க முடிந்து, 2வது ரன்னை ஓடுவதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார். ராஜஸ்தான் அணியின் மனதில் ஒரே குஷி. மும்பை அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்ததது. காரணம், மும்பை அணியினால் சமமான ஸ்கோரினை மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனால் நடுவர்கள் மற்றும் எதிரணி வீரர்கள் சிலர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அதில், மும்பை அணி இலக்கினை அடையவில்லையென்றாலும் ராஜஸ்தான் அணியின் ஸ்கோரினை சமனாக அடித்தது. அதன் காரணமாக, நெட் ரன் ரேட் என்கிற புள்ளிகளின் கணிப்பில், அடுத்து ராஜஸ்தான் அணி வீசவுள்ள பந்தில் நான்கு அல்லது ஆறை அடித்தால் மும்பை அடுத்த சுற்றிற்கு தகுதி பெரும். இல்லையெனில், ராஜஸ்தான் அணி தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும். உள்ளே வந்தார், ஆதித்ய டாரே. பல நேர பேச்சுவார்தைக்குப்பின் ஃபால்க்னெர் தவறாக கால்களை நோக்கி மீண்டும் ஓர் ஃபுள் டாஸ் பந்தினை வீச, ஆதித்ய டாரே சிக்ஸர் அடித்தார். ராஜஸ்தான் அணியிற்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையாக மாறியது. மறுபுறம் மும்பை அணி, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. வீரர்கள், மைதானத்தின் உள்ளே ஓட்டத்தில் இருந்தார்கள். டிராவிட் மறுபுறம், தனது தொப்பியை தூர வீசிவிட்டு வெறுப்பில் சென்றார்.


ஆட்ட நாயகன் விருதை பெற்றது கோரே ஆண்டர்சன் - தனது ஆட்டமிழக்காத 95*(44)காக. 

                     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?