இந்திய கிரிக்கெட்டில் மறவாத ஓர் தினம்

2011ம் உலகக்கோப்பையில் கிடைத்த வெற்றியைப்பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். காரணம், அவ்வாண்டில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இணையதளங்களின் பங்கீடு. தொண்ணுறுகள் மற்றும் இரண்டாயிரங்களின் ஆரம்பத்தில் பிறந்தவர்கள் கொண்டாடும் நிகழ்வாக அமைய, நமது தந்தை, பாட்டன் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு தான் 1983ம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றி. அதுவே கடைசி 60 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர். ப்ரூடென்ஷியல் நிறுவனம், ஒப்பந்தமிட்ட கடைசி உலகக்கோப்பை தொடரும் அதுவே.

இரு உலகக்கோப்பை தொடர்களுக்கு இடையே கிரிக்கெட் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம். இந்த 28 வருட இடைவெளி, கிரிக்கெட்டின் தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில், வீரர்கள் வெள்ளையுடை அணிந்து விளையாடுவார்கள். இப்போது, ஒவ்வொரு அணியிற்கும் ஒவ்வொரு வண்ண உடை. ஒளிபரப்பு உயர்த்தப்பட்டது. 60 ஓவர்கள் 50 ஓவர்களாக ஒரு நாள் கிரிக்கெட்டில் மாறுபட, 20 ஓவர் கிரிக்கெட்டும் எட்டிப்பார்த்தது. உலகில் உள்ள கிரிக்கெட் அணிகளின் நிலை, வெகு விரைவாக மாறுபட்டது. அப்போது தலைக்கவசம் அணிந்திருந்தாலும், அதில் கிரில் கம்பி இல்லாமல் உருவாக்கப்பட்டவை. இப்போது, கிரில் கம்பிகள் மிகவும் அவசியம். அப்போது, அறைக்குழி பந்துகளை வீசுவதற்கு கணக்கீடு இல்லை. இப்போது ஓவருக்கு ஒரு பௌன்சர், அல்லது ஒரு நாள் கிரிக்கெட்டில் ஓவருக்கு இரண்டு பௌன்சர் என மாற்றப்பட்டது. அது மட்டுமின்றி, அப்போதைய காலகட்டத்தில் ஒரு அணி போட்டியை வென்றால், மைதானத்தில் உள்ள அனைத்து ரசிகர்களும், மைதானத்தின் உள்ளே இறங்கி தங்களின் வீரர்களை கட்டியணைத்து தூக்கி கொண்டாடுவார்கள். ஆனால், இப்போது மைதானத்தின் உள்ளே இறங்கினால் மிகவும் பெரிய குற்றமாகும்.

நமது தந்தை, பாட்டன் மிகவும் புண்ணியம் செய்தவர்களே. காரணம், இரு உலககோப்பைகளையும் நேரில் கண்டு ரசித்தனர்.இரு உலகக்கோப்பை தொடர்களின் இடையே கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்களையும் நேரில் ஒவ்வொரு நிகழ்வையும் கண்டுள்ளார்கள்.

சரி, இப்போது போட்டியை பற்றி கவனிப்போம். மேற்கு இந்திய தீவுகள் அணி அப்போது உள்ள காலகட்டத்தில், கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்பட்டனர். உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த ஓர் அணி. 1975, மற்றும் 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களின் வெற்றியாளர்கள். 1983ம் ஆண்டிலும், லீக் சுற்றில், முதல் இரண்டு அணிகளில் முதல் அணியாக அமைந்தது. அதனை தொடர்ந்து, அரையிறுதி போட்டியில் பாக்கிஸ்தான் அணியை, தொடரை விட்டு வெளியே அனுப்பி, இறுதி போட்டியை அடைந்தது. கிளைவ் லோயிட்'டின் தலைமையில் மூன்றாம் உலகக்கோப்பை வெற்றியை உறுதி செய்ய புறப்பட்டது. அணியிற்கும் சரி அவருக்கும்  சரி, இதனை வென்றால் மூன்றாவது உலகக்கோப்பை ஆகும். மறுபுறம், இந்திய அணி, 1975ம் ஆண்டில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. 1979ம் ஆண்டில் வெற்றியின்றி மீண்டும் லீக் சுற்றில் வெளியேறியது.

இம்முறை அணியின் தலைவர் கபில் தேவ், அணியை சிறப்பாக வழிநடத்தினார். லீக் சுற்று, சென்ற இரு உலகக்கோப்பை தொடைகளை போன்று இல்லாமல், 8 அணிகளை வைத்து, லீக் சுற்றில் குழுக்களாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் நான்கு நான்கு அணிகளாக வரிசைப்படுத்தி, ஒரு அணி மீதம் உள்ள மூன்று அணிகளுடன் இரண்டு இரண்டு முறை போட்டியிட்டு, அதில் குழு பட்டியலில், முதல் இரண்டு அணிகளுள் இடம் பெற்றால் அரை இறுதி சுற்றை அடைய இயலும். இதனை நான் கூறுவதற்கே மிகவும் பெரிதாக உள்ளது, அப்போது தொடரில் விளையாடியவர்கள் நேரில் கண்ட சவால்கள் எவ்வாறு என நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, இதுவே கடைசி 60 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்.

லீக் சுற்றில் இரண்டு முறை மேற்கு இந்திய தீவுகள் அணியிற்கு எதிரே இந்திய அணி மோதியுள்ளது. அதில், இந்திய அணி ஒரு முறையும், மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இரண்டு முறை கோப்பைகளை தட்டி சென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியிற்கு போட்டியை எவ்வாறு வெற்றிபெற வேண்டும் என்று நன்கு அறிந்திருக்கும்.

லார்ட்ஸ் மைதானத்தில், டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். பந்துவீச்சில் வள்ளல்கள், சரியான முடிவை எடுத்தனர். இந்திய அணியின் சார்பாக சுனில் கவாஸ்கர் மற்றும் இப்போது நாம் அன்போடு அழைக்கும் "சீக்கா" என்கிற க்ரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஓப்பனிங் மேற்கொள்ள களத்தில் இறங்கினர். கிளைவ் லோயிட், முதல் கட்ட ஓவர்களில் ஸ்லிப் திசையில் இரண்டு ஃபீல்டர்களை நிறுத்தி வைத்தார். சுனில் கவாஸ்கர், மேற்கு இந்திய தீவுகளின் பந்துவீச்சில், தடுமாற்றம் அடைந்து, இறுதியில் வெறும் 2 ரன்களுக்கு, ஆண்டி ராபர்ட்ஸ் அவரின் விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால், அதிரடி ஆட்டத்திற்கு பெயர் வாங்கிய சீக்கா, அன்றும் ஜொலித்தார். ஆண்டி ராபர்ட்ஸ் வீசும் வேகப்பந்துகளை, டீப் ஸ்குவையர் லெக் திசையில், புள் ஷாட்'டின் வாயிலாக மிகவும் அலட்சியமாக பௌண்டரிகள் அடித்தார். மறுபுறம், மொஹிந்தர் அமர்நாத் சிறிது நிதானத்துடன் ரன்கள் குவித்தார். ஆனால், சீக்க செய்த ஓர் தவறு, மால்கம் மார்ஷலின் முதல் ஸ்பெல் ஓவரின் கடைசி பந்தில், ஸ்விங் ஏதும் இன்றி நேராக வீசப்பட்ட பந்தினை ஃபிலிக் ஷாட் அடிக்க முயன்று எல்.பி.டபுள்யூ ஆனார். அங்கிருந்து, ஓர் பார்ட்னெர்ஷிப் அமைக்க, 30 ஓவர்களில் முடிவில், 90/2 என ஸ்கோர் இருந்தது. அப்போது மைகேல் ஹோல்டிங்'கின் அற்புத இன்ஸ்விங்கர் பந்து, மொஹிந்தர் அமர்நாத்தின் பாதுகாப்பை மீறி, ஸ்டம்ப்பை பிடுங்கியது. மிகவும் அழகாக வீசப்பட்ட ஓர் இன்ஸ்விங்கர் பந்து. அங்கிருந்து சரிவு ஆரம்பித்தது. கபில் தேவ், மிகவும் அவசரத்துடன் ரன்களை குவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், லாங் ஆன் திசையில் நின்றிருந்த மைகேல் ஹோல்டிங்கிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். பல வீரர்கள், மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஸ்விங் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தவரான ஷாட் அடித்து தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தார். அதிலும், குறிப்பாக, பலவிண்தர் சிங்'கிற்கு, மைகேல் ஹோல்டிங் வீசிய பௌன்சர் பந்து, நேராக அவரின் தலையில் உள்ள தலைக்கவசத்தை தாக்கியது. அதிலும் நான் ஏற்கனவே குறிப்பிட்ட வாறு, அப்போது உள்ள காலகட்டத்தில் தலைக்கவசம் உத்தரத்தில் இருந்தது என்பது நீங்கள் அறிவீர். அதில், அவரது தலையினை தாக்குமாறு வீசப்பட்ட பௌன்சர் பந்து, எவ்வித சிறப்பாகவும் அபாயகரமாகவும் அமைந்திருக்கும் என புரிந்துக்கொள்ளுங்கள். ஆனால், 140 ரன்களுள் அனைத்து விக்கெட்டுகளை இழந்திருக்க வேண்டிய இந்திய அணி, சந்தீப் பாட்டிலின் முக்கிய 27 ரன்கள், 183 ரன்கள் வரை அழைத்து சென்றது. ஆனால், சந்தீப் பாட்டிலின் ஆட்டம் பெரிதும் கண்டுக்கொள்ள வில்லை. இறுதியில், 54.4 ஓவர்களில் முடிவில் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராக சீக்கா 38 ரன்கள் அடித்துள்ளார்.

இதனை வெற்றிபெற்று வரலாறு படைக்க வேண்டும், என்று இருந்த இந்திய அணியின் வெறியும், ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத சமத்துவமும், இறுதி வரை அழைத்து சென்றது. கபில் தேவின், ஓர் வழிநடத்தல் அணியிற்கு கூடுதல் நம்பிக்கையை வழங்கியது. முதல் கட்ட ஓவர்களில், கபில் தேவ், ஸ்லிப் திசையில் இரண்டு ஃபீல்டர்களை நிற்க வைத்தார். அதில் இறுதி வரை, ஒரு ஸ்லிப் ஃபீல்டரை மாற்றியமைக்காமல், அங்கேயே நிற்கவைத்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு, மேற்கு இந்திய தீவுகள் அணியினை ஒப்பிடும் போது, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு வலுவுள்ள வேகப்பந்து வீச்சு அல்ல. இந்திய அணியை போன்று, தொடக்கத்தில் கோர்டன் கிரீனிட்ஜ், பெரும் தடுமாற்றத்திற்கு பிறகு, 1 ரன்னுக்கு, பலவிந்தர் சிங், அவரை பவுல்டு எடுத்தார். ஆனால், களமிறங்கிய உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன், விவியன் ரிச்சர்ட்ஸ், அன்றும் அச்சுறுத்தினார். மிகவும் அதிரைட்டியான ஆட்டம். தன்னை ஏன் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன், என கூறுகிறார்கள் என்று இந்திய அணியிற்கு பாடம் கற்பிக்கின்றார் . மறுபுறம், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் நிதானமாக ரன்களை குவித்தார். வெகு விரைவில் 50 ரன்களை கடந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. மதன் லால், அவ்வணியிற்கு எமனாக அமைந்தார். முதலில் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ். ஷார்ட் கவர் திசையில் நின்றுக்கொண்டிருந்த, ரோஜர் பின்னியின் கைகளில் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். பின்னர், விவியன் ரிச்சர்ட்ஸ். விவியன் ரிச்சர்ட்ஸின் வீழ்ச்சி, மதன் லாலின் பந்துவீச்சை கடந்து, கபில் தேவின் சிறப்பான ஃபீல்டிங் என்று கூறலாம். மதன் லால், கால்களை நோக்கி பந்து வீச, அதனை மிகவும் அலட்சியமாய் புள் ஷாட் அடித்தார் விவியன் ரிச்சர்ட்ஸ். பாட்டின் மேல்பகுதியில் பந்து அடித்து, டீப் ஸ்குவையர் லெக் திசையை நோக்கி பறந்தது. கபில் தேவ், ஸ்குவையர் லெக் திசையில் இருந்து டீப்ஸ்குவையர் திசை வரை, ஓடி சென்று, அவ்வோட்டத்திலேயே பந்தினை கைப்பற்றினார். போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அங்கிருந்து, மிகவும் பெரிய சரிவு. இடையில், கிளைவ் லோயிட்'டின் கால்களில் தசை பிடிப்பு ஏற்பட, கவலை நிலையில் இருந்தது மேற்கு இந்திய தீவுகள் அணியின் நிலை. 50/1 என்கிற நிலையில் இருந்து 76/6 என்று நிலை மாறியது. சரி, இந்திய அணிதான் எளிதாக வெல்ல போகின்றார்கள், என நினைக்கும் நேரத்தில், ஜெஃப் டுஜோன் மற்றும் மால்கம் மார்ஷல் சிறிது எதிர்ப்பை தெரிவித்தனர். இருவரும் இனைந்து, 43 ரன்கள் குவிக்க, ஸ்கோர் 119/6 என இருந்தது, இனி விட்டுவைப்பது நன்றல்ல, விக்கெட் கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுத்தது இந்திய அணி. மொஹிந்தர் அமர்நாத், இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால், அவரை கடந்து, டுஜோன் செய்த தவறு என்றே கூறவேண்டும். எங்கோ ஸ்டம்ப்பை விட்டு வெளியே செல்லும் பந்தினை, அடிக்க முயன்று, அதற்கு ஏற்ப நிலையில் நின்றுகொண்டு, இறுதி நொடியில், தனது மட்டையை நகர்த்த முயன்றார். மட்டையின் பிற்பகுதியில் அடித்து, ஸ்டம்ப்பை அடித்தது. ஷாட் அடிக்கும் நிலையிற்கு, ஓர் பேட்ஸ்மேன் சென்றடைந்தால், ஒன்று நினைத்த ஷாட்டை அடிக்க வேண்டும், இல்லையெனில் பந்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யாமல், இறுதி நொடியில் மட்டையை விலக்கினால் இவ்வாறு தான் ஏற்படும். அங்கிருந்து 140 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளை இழந்தது மேற்கு இந்திய தீவுகள் அணி.

முழு விளையாட்டு களமும், பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்தது. இன்றும், பலர் நினைத்து பெருமிதம் கொள்ளும் வெற்றியாக உருவாக்கப்பட்டது. அனைவரின் உழைப்பில் கிடைத்த வெற்றி.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - மொஹிந்தர் அமர்நாத் ( பேட்டிங்கில் 26 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் - 3/12). ஆனால், தனிப்பட்ட முறையில், அனைவரும் மறந்தது சந்தீப் பாட்டிலின் ஆட்டம். கபில் தேவின் பெயர் இன்றும் நிலைத்து நின்றதன் காரணம், 2 கோடி மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை தாங்கி சுமந்ததன் காரணத்தினால் மட்டுமே. உலகின் தலைசிறந்த, தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார் கபில் தேவ்.
                       
    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?