2019 உலகக்கோப்பை இறுதி போட்டி - உலகின் தலைசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

 சென்ற ஆண்டு, இந்நாள், 2019ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின், இறுதி போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை போன்ற அணிகள் ஏதும் இல்லாமல் இரு புதிய அணிகள் மோதியது. இவ்விரு அணிகளில் எந்த அணி போட்டியை வென்றாலும், அவர்கள் கைப்பற்றுகின்ற முதற் கோப்பையாகும். அவ்வணிகள், இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகும்.

இங்கிலாந்து தான் முதன் முதலில் உலகிற்கு கிரிக்கெட் எனும் விளையாட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால், இதில் சோகம் என்னவென்றால், கிரிக்கெட்டின் மூதாதையர்களாகிய இங்கிலாந்து, இது வரை ஒரு உலகக்கோப்பை பட்டத்தையும் கைப்பற்றவில்லை. அவர்களை பொறுத்த வரை, வெற்றியை கடந்து தங்களின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. மறுபுறம், நியூஸிலாந்து அணி களமிறங்க, அவர்களுக்கும் தென் ஆஃப்ரிக்கா அணியிற்கும் உள்ள ஓர் நிலை, நக்கவுட் சுற்றுகளில் அடிவாங்குவது. உலக தரத்தில் எவ்வாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இன்றும் ஓர் கோப்பையை இவ்விரு அணிகள், கைப்பற்றவில்லை. குறைந்தபட்சம், இங்கிலாந்து அணியாவது 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளார்கள். ஆனால், நியூஸிலாந்து அணியிற்கு, அதனை கைப்பற்றவும் குடுப்பணையில்லை. இதில், தொடர்ச்சியாக, நியூஸிலாந்து அணியிற்கு, இரண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகும். இப்போட்டியிலாவது, தங்களின் விதியை மாற்ற இயலுமா ? என்கிற கேள்வி நிச்சயம் உள்ளது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கப்டில், தொடக்கத்திலேயே களத்தை விட்டு வெளியேறினாலும், மறுபுறம் ஓப்பனிங் களமிறங்கிய ஹென்றி நிக்கோலஸ், சற்று துணிச்சல் வெளிப்படுத்துகின்றார். ஆனால், இவ்வுலகக்கோப்பை தொடர் முழுவற்றிலும் இருந்த குறையை இறுதிப்போட்டியில் களமிறங்கியும் அதை சரி செய்துக்கொள்ள வில்லை, நியூஸிலாந்து அணி. கேன் வில்லியம்சன், சில பௌண்டரிகளுடன் தொடங்க, நிக்கோலஸ் மற்றும் வில்லியம்சன் இருவரும் இனைந்து ஸ்கோரை உயர்த்தினர். ஹென்றி நிக்கோலஸ், அரை சதத்தை எட்டினார். ஆனால், கேன் வில்லியம்சன், நன்றாக வீசப்பட்ட குட் லெங்த் பந்தில் தனது விக்கெட்டை இழந்துவிட்டு சென்றார். அவரின் வாழ்விற்கு பின், மடமட'வென விக்கெட்டுகள் விழுந்தது. ஆனால், டாம் லேதமின் ஆட்டம், நியூஸிலாந்து அணியை காப்பாற்றி, கரைசேர்த்தது. மிகவும், அற்புதமான ஆட்டம். அவர் இல்லையெனில், 180ல் இருந்து 190 ரன்களுள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருக்கும். மிகவும் நேர்த்தியான ஆட்டம். ஆனால், நியூஸிலாந்து அணி, இடைப்பட்ட ஓவர்களில் ரன்களை ஓடி ஓடி எடுத்தனர்.  ஆதலால், பௌண்டரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இது, இப்போட்டியின் முடிவை தீர்மானிக்கவுள்ள ஓர் கருத்து என அப்போது எவருக்கும் புரியவில்லை. நியூஸிலாந்து அணியின், கீழ் தலத்தில் உள்ளோர், சொற்ப ரன்களுக்கு வெளியேற, இறுதியில் 241/8 என்கிற ஸ்கோருடன் முடித்தது நியூஸிலாந்து அணி. 

சிறிய ஸ்கோராக இருப்பினும், இறுதி போட்டியை பொறுத்தவரை, எதுவும் கடினம் தான். களமிறங்கினர் இங்கிலாந்து அணியின் ஒப்பனர்கள். ஜேசன் ராய், தொடக்கத்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். பைர்ஸ்டோ, மிகவும் நேர்த்தியாக விளையாடினாலும், அதனை பெரிதாக மாற்றமுடியாமல், வெளியேறினார். இவ்வாறு, முதல் 4 விக்கெட்டுகள், மிகவும் விரைவாக இழக்க, நியூஸிலாந்து அணியின் பக்கம் தான் போட்டி உள்ளது என அனைவரும் நினைத்தனர். ஆனால், அங்கு நடந்ததோ வேறு. பார்வையாளர்களுக்கு ஓர் கறி விருந்து தான். ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் களத்தில் இருந்தார்கள். இருவரும் இனைந்து மிக மிக அருமையாக விளையாடினர். இருவரும் அரை சதத்தை கடக்க, இப்போது இங்கிலாந்து அணியின் பக்கம் போட்டி திரும்பியது. ஆனால், இங்கிருந்து நடைபெற்றதும் வேறு. பட்லர், தனது விக்கெட்டை இழக்க, ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. ஒருபுறம் ஸ்டோக்ஸ் அவர்கள், தனது கிரிக்கெட் வாழ்வில் இதுவரை ஆடாத ஓர் சிறப்பான ஆட்டத்தை ஆடினார். ஆனால், மறுபுறம், விக்கெட்டுகளை பரிசளித்தனர். இருப்பினும், இறுதிவரை சென்றது. இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவை என்கின்ற நிலை. அதுவரை மிகவும் நிதானமாக விளையாடிய ஸ்டோக்ஸ், இறுதி ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் இல்லை. 4 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்கிற நிலை. நியூஸிலாந்து அணியின் பக்கமே போட்டி உள்ளது என அனைவரும் நினைக்க, லாங் ஆண் திசையில் சிக்ஸர் அடித்தார், பெண் ஸ்டோக்ஸ். தேவை, 9 ரன்கள் 3 பந்துகளில். இதற்கு அடுத்த பந்தை வீச, அதை டீப் லெக் சிஐயில் நின்றுக்கொண்டிருந்த கப்டில்லின் கைகளுக்கு அடித்து விட்டு இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார். முதல் ரன்னை வெற்றிகரமாய்முடித்தாலும் , இரண்டாவது ரன்னை எடுக்க முயன்ற பொழுது, கப்டில் மிகவும் விரைவாக பந்தை வீச, ஸ்ட்ரைக்கர் முனையிற்கு அவர் செல்ல முயன்று, டைவ் அடிக்க, தனது மட்டையில் பந்து அடித்து, தேர்ட் மேன் திசையில் பௌண்டரியிற்கு சென்றது. ஆதலால், 2 + 4 = 6. இதனை, பலர் கண்டித்தாலும், அங்கு எதிர்பாராத விதமாக நடைபெற்ற ஓர் சம்பவம் தான் இது. ஏதும் செய்ய இயலாது. இப்போது 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்று கணக்கு மாறியது. இரு அணிகளிடையே படபடப்பு. லாங் ஆஃப் திசையில் அடித்து விட்டு விரைவாக 2 ரன்களை எடுக்க முயன்ற போது, நான் ஸ்ட்ரைக்கர் புறத்தில், அதில் ரஷீத் ரன் அவுட் செய்யப்படுகின்றார். இறுதி பந்து, 2 ரன்கள், 1 விக்கெட், ஸ்ட்ரைக்கில் இருப்பது பென் ஸ்டோக்ஸ். உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகவும் தலைசிறந்த இறுதிப்போட்டி. மீண்டும், லாங் ஆன் திசையில் பந்தை அடிக்க, மீண்டும் நான் ஸ்ட்ரைக்கர் புறத்தில் றன் அவுட் நிகழ்த்தப்படுகின்றது. ஆனால், வெற்றிகரமாய் 1 ரன் எடுக்க, போட்டி சமனில் முடிவடைகின்றது. 

ஐசிசி சூப்பர் ஓவர் நடத்த திட்டமிடுகின்றது.சூப்பர் ஓவரை பொறுத்த வரை, ஒரு ஓவர் தான் போட்டி. இதில், ஒரு அணியிற்கு 2 விக்கெட்டுகள் மட்டுமே. இந்த சூப்பர் ஓவர் சமனில் முடிவடைந்தால், எவ்வணி அதிக பௌண்டரிகளை ( முதலில் நடைபெற்ற போட்டி மற்றும் சூப்பர் ஓவர் போட்டி இனைந்து) குவித்துள்ளதோ, அவ்வணியே வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில், இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியை விடவும் அதிக பௌண்டரிகளை குவித்துள்ளனர். இதனை, முதலிலே கூறினர். அதற்கு, ஒப்புக்கொண்டு தான் களமிறங்கினர். சூப்பர் ஓவரின் விதி படி, இரண்டாம் பேட்டிங்கை மேற்கொண்ட அணியே, இதில் முதலில் பேட்டிங் மேற்கொள்வர். அதனால், இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது . 

இங்கிலாந்து அணியின் சார்பாய், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் களமிறங்கினர். இருவரும் இனைந்து 15 ரன்கள் குவித்தனர். ஆதலால், ஒரு ஓவரில் 16 ரன்கள் அடித்தால் வெற்றி, என்கிற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. போட்டியை தோல்வியடைந்தாலோ அல்லது சமனில் முடிவடைந்தாலோ, வெற்றி இங்கிலாந்து அணியிற்கு தான். ஆதலால், வெற்றி பெறவேண்டும் என்று நியூஸிலாந்து அணியிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். களமிறங்கினர், நியூஸிலாந்து அணியிற்காக, கப்டில் மற்றும் நீஷம். இருவரும் இனைந்து முதல் 5 பந்துகளில் 14 ரன்களை குவிக்க, இறுதி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. அனைவரும், தாங்கள் அமரும் நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து போட்டியை கண்டனர். ஸ்ட்ரைக்கில் இருந்த கப்டில், இறுதிப் பந்தை, டீப் மிட் விக்கெட் திசையிற்கு அடித்து விட்டு வெகு விரைவாக ஓடி முதல் ரன்னை எடுத்தார். அங்கு இரண்டாம் ரன்னிற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும், இரண்டாம் ரன்னை எடுக்க முயன்றார் கப்டில். ரன் அவுட் செய்யப்படுகின்றார். போட்டி சமனில் முடிவடைய, இங்கிலாந்து அணியே வெற்றிபெற்றதாய் அறிவிக்கப்படுகின்றது.

பலர், பௌண்டரிகளின் எண்ணிக்கையை வைத்து வெற்றியை தீர்மானிப்பது தவறு எனக்கூறினார். எனக்கும் அதில் நம்பிக்கை இல்லை. இவ்வாறு பல விதிகள் ஐசிசி'யின் தரப்பில் விதிகள் உள்ளது. கிரிக்கெட் என்பது பொதுவாக, பௌண்டரிகளை மட்டுமே சார்ந்தவை கிடையாது. ஆனால், இதற்கு முன்னாள் இருந்த விதியினை விட, இது சற்று பரவாயில்லை. காரணம், இதற்கு முன் இருந்த விதி, நாக்கவுட் போட்டிகளில், சமன் எனும் முடிவு நேர்ந்தால், இதற்கு முன் விளையாடிய லீக் போட்டிகளில், அவ்விரு அணிகளின் இடங்களை வைத்து, எவ்வணி மேல்தளத்தில் உள்ளதோ, அவ்வணியே வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படும். அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, 1999ம் ஆண்டின் அரையிறுதி போட்டி, தென் ஆஃப்ரிக்கா அணியிற்கும் ஆஸ்திரேலியா அணியிற்கும் இடையே நடைபெற்ற போட்டி அது. இறுதியில், சமன் என்கிற முடிவு நேர்ந்து விடும். ஆனால், ஆஸ்திரேலியா அணி, லீக் போட்டிகளில் முன்னிலையில் இருந்த காரணத்தினால், இறுதி போட்டியிற்கு தகுதி பெற்றுவிடும். அதனால், தங்களின் இரண்டாவது கோப்பையையும் கைப்பற்ற முடிந்தது. ஆதலால் அதனை ஒப்பிடும் பொழுது, பௌண்டரிகளின் எண்ணிக்கை சற்று பரவாயில்லை என கூறினாலும், இவ்விதியும் சரியில்லை.

ஆட்ட நாயகன் விருதை பெற்றது - பெண் ஸ்டோக்ஸ். 2016ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை இறுதி போட்டியில், தான் வழங்கிய ரன்களின் காரணத்தினால், தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. இங்கு, இப்போது, தான் விளையாடிய ஆட்டத்தினால் மட்டுமே இங்கிலாந்து அணியினால் வெற்றிபெற இயன்றது. 

" வாழ்க்கை ஒரு வட்டம் டா,  தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்" 

தொடர் நாயகன் விருதை பெற்றது - கேன் வில்லியம்சன். டெண்டுல்கரின் கைகளிலிருந்து பெற்றார். 2003ம் ஆண்டில் தொடர் நாயகன் விருதை பெற்றது சச்சின் டெண்டுல்கர். அப்போது இந்திய அணி, இறுதி போட்டியில் தோல்வியடையும். இப்போது, நியூஸிலாந்து அணி, இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. அந்த வலி, மிகவும் கொடியது. ஆனால், அவ்வாறு ஏற்பட்ட வலிகளிலும், பௌண்டரியின் எண்ணிக்கை குறைவு என்கிற ஒரே காரணத்தினால், தோல்வி என்கிற முடிவை வழங்கினர் என்று தெரிந்தும், தான் அழுகையில் சிரித்தார். பொறுமையின் சிகரம். தோனி அவர்களை, நிதானத்தின் தலைவன் என்றே அழைப்பர். அவரையடுத்து, கேன் வில்லியம்சன் அவர்களையே, இப்பட்டம் சாரும் !

"பெண்ணோடு மண்ணெல்லாம் போனாலும், அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது"          

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?