நன்றி திந்தா !
பெங்கால் மாநிலத்தை சேர்ந்த, வேகப்பந்து வீச்சாளரான அஷோக் திந்தா அவர்கள், தனது ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் பார்த்த அனைவருக்கும் தெரிந்த ஒரே செய்தி, இவர் ஒரு செயப்படு பொருள் என்பதே. சமூக வலைத்தளங்களில், Dinda Academy of Pace Bowling என்கிற ஓர் பக்கத்தை உருவாக்கி, அதில் இவரை மையமாக வைத்து அனைத்து வித கிண்டல்களும் கேலிகளும் பதிவிடப்படும்.
அதில் பதிவிடப்படும் கிண்டல்கள் எவ்வாறு உள்ளதெனில், திந்தா அவர்கள் ஓர் கல்லூரியை தன் கீழ் நடத்தி வருகின்றார் எனவும், அதுல உள்ள அனைத்து வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியோராய் இருப்பர் எனவும், எவரேனும் ஏதேனும் போட்டிகளில் அதிக ரன்களை வழங்கினார் என்றால், உடனடியாக அந்த ஒரு வீரரை இந்த ஒரு கல்லூரிக்குள் அனுமதி வழங்கி நுழைக்க வேண்டும் என்று பல கலாய்கள் இருக்கும்.
2017ம் ஆண்டு IPL தொடரில், மும்பை அணியும் புனே அணியும், MCA மைதானத்தில் மோதிக்கொள்ளும். அப்போட்டியில், மும்பை அணியின் வீரரான ஹர்திக் பாண்டியா அவர்கள், அஷோக் திந்தா வீசும் கடைசி ஓவரை, பிரித்து விடுவார். பந்தை சிதறடிப்பார். அந்த ஒரு ஓவரில் மட்டுமே 29 ரன்கள் அடிக்கப்படும். அப்போது தான், Facebookல் இவ்வாறு ஒரு பக்கம் துவக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலுக்கு ஆளான திந்தா அவர்கள், தனது சமூக பக்கத்தில், தான் செய்த சாதனையை பதிவிட்டு தன்னை காத்துக்கொண்டார். கருத்து சுகந்திரம், இங்கு அனைவருக்கும் உள்ளது. ஆனால், அந்த கருத்து சுகந்திரம், சக மனிதரின் மனதை புண்படுத்தும் அளவிற்கு அமைதல் என்பது மிகவும் தவறான செயலாகும்.
சர்வதேச கிரிக்கெட்டிலும், IPL கிரிக்கெட்டிலும் நினைத்தவாறு செயல்படவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் தன்னை அசைக்க எவருமில்லை. First Class போட்டிகளில், 420க்கும் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். List A Careerல் 150க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கங்குலி அவர்களின் பல விஸ்வாசிகளுள் இவரும் ஒருவர்.
தான் கிரிக்கெட் விளையாட துவங்கிய காலத்திலிருந்து, சென்ற ஆண்டு வரை, பெங்கால் அணியின், நம்பகத்தரமான பந்துவீச்சாளராக செயல்பட்டுள்ளார். சென்ற ஆண்டு தான், பெங்கால் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கும், திந்தா அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தின் காரணத்தினால், இவ்வாண்டு கோவா கிரிக்கெட் அணிக்காக விளையாட துவங்கினார்.
கோவா அணிக்காக விளையாடும்போது தான், தன்னுடைய உடல் முன்பைப்போன்று ஒத்துழைக்கவில்லை என்கிற உண்மையை அறிகிறார். இவ்வாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடர் நிறைவு அடைந்தாவுடன், தனது ஓய்வினை அறிவித்தார்.
Comments
Post a Comment